Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூலை (ஹி.ச.)
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், பிளஸ் டூ பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50 சதவீத முக்கியத்துவம் அளிக்கும் திட்டம் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது நீட், ஜேஇஇ போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே சேர்க்கைக்கு அடிப்படையாக கொள்ளப்படுகின்றன.
இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரும் வகையில், மாணவர்களின் பள்ளி இறுதி ஆண்டு மதிப்பெண்களுக்கும் சம அளவு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் பயிலும் பள்ளி பாடத்திட்டத்துடன் ஒத்திசைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
நீட், ஜேஇஇ தேர்வுகள் பெரும்பாலும் தனியார் பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கியுள்ளதாகவும், இதனால் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் பின்தங்கும் நிலை ஏற்படுவதாகவும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பிளஸ் டூ மதிப்பெண்களுக்கு 50 சதவீத இடம் வழங்கப்பட்டால், பள்ளிக்கல்வியின் முக்கியத்துவம் அதிகரிப்பதோடு, மாணவர்கள் பாடத்திட்டத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை அமலுக்கு வந்தால், மருத்துவ சேர்க்கைக்கு நீட் மதிப்பெண் 50%, பிளஸ் டூ மதிப்பெண் 50% என்ற அடிப்படையிலும், பொறியியல் சேர்க்கைக்கு ஜேஇஇ மதிப்பெண் 50%, பிளஸ் டூ மதிப்பெண் 50% என்ற அடிப்படையிலும் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படலாம்.
எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
கல்வியாளர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் மத்தியில் இந்தப் பரிந்துரைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே எழுந்துள்ளது.
மாநில பாடத்திட்டங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், மதிப்பெண் முறையில் உள்ள முரண்பாடுகள் ஆகியவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து அடுத்தகட்ட ஆலோசனைகள் நடைபெறும் எனத் தெரிகிறது.
இந்த மாற்றம் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்குமா அல்லது கூடுதல் சுமையை ஏற்படுத்துமா என்ற விவாதம் கல்வி வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b