Enter your Email Address to subscribe to our newsletters

கடப்பா , 03 ஜூலை (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகுவில் ரூ.36,700 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள ஜே.எஸ்.டபிள்யூ. கிரீன் ஸ்டீல் ஆலைக்கான கட்டுமானப் பணிகளை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், மாநில வளர்ச்சி, தொழில் முதலீடுகள் மற்றும் தலைநகர் விவகாரம் குறித்து பேசினார்.
அப்போது முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்த சந்திரபாபு நாயுடு,
சட்டசபையில் அமராவதியை தலைநகராக ஏற்றுக்கொண்ட பிறகு, ஆட்சிக்கு வந்ததும் மூன்று தலைநகரங்கள் என்ற திட்டத்தை கொண்டு வந்ததாக குற்றம்சாட்டினார்.
தற்போது தலைநகர் குறித்து அடிக்கடி முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார்.
நேற்று விஜயவாடா, இன்று வேறு கருத்து என்று பேசுகிறார்.
மாநில மக்களின் உணர்வுகளோடு தொடர்புடைய தலைநகர் போன்ற முக்கிய பிரச்சினையில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறான முரண்பட்ட அரசியலை நான் இதுவரை பார்த்ததில்லை என்று அவர் தெரிவித்தார்.
தனது அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக செயல்பட்டு வருவதாகவும், ராயலசீமா மக்களின் நீண்டகால கனவாக இருந்த ஸ்டீல் ஆலைத் திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
முந்தைய ஆட்சியில் இரண்டு முறை அடிக்கல் நாட்டப்பட்ட போதிலும், எந்தப் பணியும் நடைபெறவில்லை என்றும், தற்போதைய அரசு அனைத்து தடைகளையும் நீக்கி கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஸ்டீல் ஆலை ரூ.36,700 கோடி முதலீட்டில் இரண்டு கட்டங்களாக அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டத்தில் ரூ.4,500 கோடியும், இரண்டாம் கட்டத்தில் ரூ.11,850 கோடியும் முதலீடு செய்யப்படுவதுடன், சூரிய மின்சார உற்பத்திக்காக ரூ.20,350 கோடி செலவிடப்பட உள்ளது. இந்த ஆலை 24 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும், ஆண்டுக்கு 2 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
முழுமையாக பசுமை ஆற்றலை பயன்படுத்தி எஃகு உற்பத்தி செய்யும் இந்தியாவின் முன்னோடி ஆலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்றும் கூறினார்.
இந்தத் திட்டத்திற்காக மாநில அரசு 1,100 ஏக்கர் நிலம், கந்திகோட்டா அணையிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை, ரெயில்வே இணைப்பு உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி வருவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
மேலும், ராயலசீமாவை தொழில் வளர்ச்சியின் முன்னணி மண்டலமாக மாற்ற அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாகவும், எஃகு தொழிற்சாலை மட்டுமின்றி ஆட்டோமொபைல், மின்னணு, பசுமை ஆற்றல், விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜே.எஸ்.டபிள்யூ. குழுமத் தலைவர் சஜ்ஜன் ஜிந்தால், மத்திய அமைச்சர் பூபதிராஜு ஸ்ரீனிவாஸ் வர்மா, மாநில அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA