சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு
ராமநாதபுரம், 03 ஜூலை (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான சாலைகளில் மாடுகள் திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், அதனால் உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்படுவதாகவும் கூறி, அவற்றை அப்புறப்படுத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கி
சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் நீதிமன்றம்  உத்தரவு


ராமநாதபுரம், 03 ஜூலை (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான சாலைகளில் மாடுகள் திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், அதனால் உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்படுவதாகவும் கூறி, அவற்றை அப்புறப்படுத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சாலைகளில் கால்நடைகள் திரிவதைத் தடுக்க ஏற்கெனவே தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் இதுகுறித்து தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், கால்நடைகளை வேண்டுமென்றே பிரதான சாலைகளில் விடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சாலைகளில் திரியும் கால்நடைகளால் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

எனவே, கால்நடைகளை அப்புறப்படுத்தும் பணியை உள்ளாட்சி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து எந்தவித தொய்வும் இல்லாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

Hindusthan Samachar / vidya.b