உஜ்ஜைனியில் கனமழை - வெள்ளத்தில் மூழ்கிய கோயில்கள்
உஜ்ஜைனி, 03 ஜூலை (ஹி.ச.) மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரம் கடும் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளது. இன்று பெய்த கனமழையால் சிப்ரா நதியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, ராம் காட் பகுதியில் உள்ள பல கோயில்கள் நீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் மழைநீ
உஜ்ஜைனியில் கனமழை - வெள்ளத்தில் மூழ்கிய கோயில்கள்


உஜ்ஜைனி, 03 ஜூலை (ஹி.ச.)

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரம் கடும் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளது.

இன்று பெய்த கனமழையால் சிப்ரா நதியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, ராம் காட் பகுதியில் உள்ள பல கோயில்கள் நீரில் மூழ்கின.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகள் அனைத்தும் ஆறுகளாக மாறியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களில் தென்மேற்கு பருவமழை வடக்கு அரபிக்கடல், குஜராத், மத்தியப் பிரதேசத்தின் எஞ்சிய பகுதிகள், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளுக்கு முன்னேறுவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா, மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த ஐந்து முதல் ஆறு நாட்களுக்கு மத்திய இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய இந்தியாவைப் பொறுத்தவரை, ஜூலை 8 வரை கிழக்கு மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தில் பரவலாக மழை பெய்யும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.

உஜ்ஜைனியில் ஏற்கனவே சிப்ரா நதியின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முன்னறிவிப்பு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், மகாராஷ்டிராவிலும் கனமழை விடாமல் பெய்து வருகிறது. மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என பிருஹன்மும்பை மாநகராட்சி கணித்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மும்பையில் 126 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் முறையே 110 மி.மீ மற்றும் 114 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b