Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 03 ஜூலை (ஹி.ச)
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை அகற்றிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் இன்று (3-ம் தேதி) நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட குழு செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் பத்ரி முன்னிலை வகித்தார்.
இப்போராட்டத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,
விதிகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடியை உடனே அகற்றிட வேண்டும். அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைக்கு சுங்கக் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய அவல நிலை இருக்கிறது.
குறிப்பிட்ட காலத்திற்குள் சுங்கச்சாவடியை அகற்றிட வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அதுவரை 20 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மக்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மேலும், சுங்கச்சாவடியில் ஒரு வாகனத்திற்கு 10 வினாடிகளுக்கு மேல் ஆகக்கூடாது.
100 மீட்டரை தாண்டினால் கட்டணம் இன்றி வாகனத்தை அனுமதிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரை சந்தித்து விட்டு போராட்டம் தொடர்வதா என முடிவு செய்ய உள்ளோம்.
ஆளுநருக்கு ஏதாவது கருத்துக்கள் இருக்கிறது என்று சொன்னால், அது முதல்வருடைய கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, தானாக, தன்னிச்சையாக ஆளுநர் செயல்படுவது என்பது அரசியல் சாசனம் அவருக்கு வழங்கியிருக்கக்கூடிய அதிகாரத்திற்கு எதிரானது, விரோதமானது. ஆளுநருடைய அந்த அணுகுமுறை என்பது ஏற்கத்தக்கதல்ல.
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் நெரிசல் ஏற்படுவதற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அப்போதே சொல்லியிருக்கிறோம். அதுதான் இப்போதும் எங்களுடைய நிலைப்பாடு.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை, எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் விலை பேசுவது, குதிரை பேரம் நடத்துவது போன்றவற்றில் யார் ஈடுபட்டாலும் அது தவறான ஒரு செயல். ஜனநாயகத்திற்கு விரோதமானது. இது போன்ற போக்குகள் தவறானது என்பதை ஏற்கனவே நாங்கள் தெரிவித்திருந்தோம்.
குறிப்பாக, நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து மாற்றுக் கட்சியில் இணைந்த போது எங்களுடைய எதிர்ப்பினை நாங்கள் வந்து தெரிவித்து இருக்கிறோம்.
இப்போதும் அதைத்தான் சொல்ல விரும்புறேன். இந்த மாதிரியான ஜனநாயகத்திற்கு விரோதமாக, இது போன்ற விலை பேசுவது, பேரம் பேசுவது போன்ற நடவடிக்கைகள் என்பது யாராக இருந்தாலும் தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b