Enter your Email Address to subscribe to our newsletters

உஜ்ஜைன், 03 ஜூலை (ஹி.ச.)
பைரேட் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் செயலியை பயன்படுத்தி மின்-ரிக்ஷா ஓட்டுநர்களிடம் சைபர் மிரட்டலில் ஈடுபட்ட நபரை உஜ்ஜைன் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
புளூடூத் மூலம் இயக்கத்தில் உள்ள மின்-ரிக்ஷாக்களை தொலைவிலிருந்து கடத்தி முடக்கும் இந்த செயலி, மீண்டும் இயக்க ரேன்சம் எனப்படும் பிணைத்தொகையை குற்றவாளிகள் கோர பயன்படுகிறது.
நகரில் பரவலாக வாகனங்கள் ஹேக் செய்யப்படுவதாக பல புகார்கள் வந்ததை அடுத்து, உஜ்ஜைன் போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
‘BAT-BMS’ என்ற மொபைல் செயலி மூலம் மின்-ரிக்ஷாக்களின் டிஜிட்டல் பேட்டரி மேலாண்மை அமைப்பில் (BMS) ஊடுருவி, பாதி வழியில் மின்சாரத்தை துண்டிக்கும் சைபர் தாக்குதல் நடைபெறுகிறது.
நீல் கங்கா காவல் நிலைய பொறுப்பாளர் தருண் குரில் இச்சமபவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
லோட்டி திராஹாவில் ஒரு ஆட்டோ ஓட்டுநரின் வாகனம் நின்றுவிட்டது. ஒரு இளைஞன் அதை சரிசெய்வதாக கூறி ரூ.200 வசூலித்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
விசாரித்தபோது, நகரில் மின்-ரிக்ஷாக்கள் தொலைவிலிருந்து நிறுத்தப்படுகின்றன – குறிப்பாக, மொபைல் செயலி மூலம் பேட்டரிகள் செயலிழக்கச் செய்யப்படுகின்றன என ஓட்டுநர் தெரிவித்தார்.
சில குற்றவாளிகள் இந்த செயலியை பயன்படுத்தி வாகனங்களை முடக்கி, மீண்டும் இயக்க பணம் கேட்கின்றனர்.
இது தொடர்பாக நாங்கள் FIR பதிவு செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர் நேற்று காவலில் எடுக்கப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நகரின் பல்வேறு இடங்களில் இருந்தும் புகார்கள் வரும் நிலையில், இதுபோன்ற பல சம்பவங்கள் நடைபெறுகின்றன.
உஜ்ஜைன் போக்குவரத்து போலீசார் இந்த பிரச்சினையை தீவிரமாக கையாண்டு வருகின்றனர்.
என்று குரில் கூறினார்.
இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள, உள்ளூர் சட்ட அமலாக்க அமைப்புகள் மின்சார வாகன விற்பனையாளர்களுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றன.
அங்கீகரிக்கப்படாத சிக்னல் தலையீடு ஏற்பட்டால், ஓட்டுநர்கள் தங்கள் கணினிகளை மீட்டமைக்கக்கூடிய சட்டபூர்வமான, அங்கீகரிக்கப்பட்ட மென்பொருளை நிறுவுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.
சட்ட வல்லுநர்கள் இந்த சைபர் மிரட்டலை ஒரு சிறிய தொல்லை அல்லது மோசடியாக அல்லாமல், கடுமையான சட்டப்பூர்வ குற்றமாக வகைப்படுத்தியுள்ளனர்.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி, வாகன மென்பொருளில் அங்கீகரிக்கப்படாத வகையில் நுழைந்து மாற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
பைரேட் செய்யப்பட்ட செயலியின் விநியோகம் மற்றும் மாற்ற வலைப்பின்னல்கள் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b