Enter your Email Address to subscribe to our newsletters

திருவையாறு, 03 ஜூலை (ஹி.ச)
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள பூதலூரை அடுத்த வெண்டையம்பட்டியைச் சேர்ந்த சீதாலட்சுமி என்பவரின் மகள், பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாணவி, அதிகாலையில் காணாமல் போனது தெரியவந்தது.
பல இடங்களில் தேடியும் மாணவியைக் கண்டுபிடிக்க முடியாததால், தாய் சீதாலட்சுமி பூதலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், மாணவியின் வீட்டின் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் அவரது உடல் மிதப்பதை இன்று காலை அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூதலூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், கிணற்றில் இருந்து மாணவியின் உடலை மீட்டனர்.
உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் சதி உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிளஸ் 2 படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b