Enter your Email Address to subscribe to our newsletters

அரியலூர், 30 ஜூலை (ஹி.ச.)
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பல அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மதுபான கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இதன் காரணமாக, ஜெயங்கொண்டம் பகுதியில் இயங்கி வந்த 6 அரசு மதுபான கடைகளை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மூடினர்.
மூடப்பட்ட மதுபான கடைகள் அனைத்தும் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கான இடத் தேர்வு ஆய்வில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் வல்லம் கிராமத்தில் மூடப்பட்ட அரசு மதுபான கடையை, இடையக்குறிச்சி கிராமத்தின் முதுகுளம் சாலையில் அமைக்க முடிவு செய்த அரசு அதிகாரிகள், இது குறித்து அரசின் சார்பில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, இடையக்குறிச்சி கிராமத்தில் மதுபான கடை அமைக்க ஆய்வு நடைபெற்று வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம பொதுமக்கள் இன்று (ஜூலை 30) திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறிய போது,
ஜெயங்கொண்டம் பகுதியில் மூடப்பட்ட 6 மதுபான கடைகளை இனி திறக்க மாட்டோம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வல்லம் கிராமத்தில் மூடப்பட்ட மதுபான கடை மீண்டும் இடையக்குறிச்சி கிராமத்தில் திறக்கப்படுவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த கிராமத்தில் மதுபான கடை வருவதை பொதுமக்களாகிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதுகுறித்து நாங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்க உள்ளோம்.
இங்கு மதுபான கடையை கொண்டுவருவதற்கான முயற்சியை மாவட்ட நிர்வாகம் கைவிடவேண்டும் என தெரிவித்தனர்.
இடையக்குறிச்சி கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN