Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 30 ஜூலை (ஹி.ச.)
கர்நாடக அரசு தாக்கல் செய்த மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் நிராகரித்துள்ளது.
கர்நாடக அரசு சமர்ப்பித்த இந்த திட்ட அறிக்கையை கடந்த மாதம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலேயே ஆணையம் திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி ஆற்றின் குறுக்கே, கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக 4 டிஎம்சி தண்ணீர் வழங்கவும், 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் இந்த திட்டம் உதவும் என்று கர்நாடக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் இந்த திட்டம் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கும், உச்ச நீதிமன்றத்தின் 2018-ம் ஆண்டு தீர்ப்புக்கும் முரணானது என்று தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேகதாது அணை கட்டப்பட்டால், காவிரி ஆற்றின் நீரை கர்நாடகா அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளதாகவும், இதனால் தமிழக விவசாயிகளுக்கு திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீரின் அளவு கடுமையாக பாதிக்கப்படும் என்றும் காவிரி மேலாண்மை ஆணையம் கருதுகிறது.
இந்த பின்னணியில், கர்நாடகா கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் ஏற்கனவே திருப்பி அனுப்பியிருந்த நிலையில், தற்போது மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட புதிய அறிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டை பாதிக்கும் எந்தவொரு புதிய திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்று ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b