Enter your Email Address to subscribe to our newsletters

நாகை, 30 ஜூலை (ஹி.ச.)
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கிள்ளுக்குடி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் முறையாக இல்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே இருந்த குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டும், குழாய்களில் அடைப்பு ஏற்பட்டும் தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கிராம மக்கள், குறிப்பாக பெண்கள், குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பஞ்சாயத்து நிர்வாகத்திடமும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று காலை திடீரென ஒன்று திரண்டு கிள்ளுக்குடி முக்கிய சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய குடிநீர் குழாய் இணைப்பு அமைத்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பழுதடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாக சீரமைத்து, புதிய குழாய் இணைப்பு அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும், அதுவரை லாரிகள் மூலம் தற்காலிகமாக குடிநீர் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
அதிகாரிகளின் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Hindusthan Samachar / vidya.b