காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா - பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
திருநெல்வேலி, 31 ஜூலை (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த புராதன கோவிலில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி ஆடி அ
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா - பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பு


திருநெல்வேலி, 31 ஜூலை (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

இந்த புராதன கோவிலில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை மூன்று நாட்கள் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவிழாவிற்கான போதிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், கோவில் திருவிழாவிற்கு தேவையான பூஜை பொருட்கள் மற்றும் பிற பொருட்களை கொண்டு செல்ல ஏதுவாக ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை தனியார் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருவிழா முடிந்த பின்னர் கோவில் வளாகத்தில் தூய்மைப் பணி மற்றும் உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பாபநாசம் சோதனைச் சாவடி மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b