Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 31 ஜூலை (ஹி.ச.)
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
முன்னதாக பேசிய அமைச்சர் அருண் ராஜ்,
மருத்துவர்கள் நியமன கட்-ஆப் மதிப்பெண் விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை குறித்துப் பதிலளித்துப்பேசிய கடந்த திமுக ஆட்சிக்காலத்தில்
(2024-25) முறையே 119 மற்றும் 145 இடங்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி ஒன்றிய அரசுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
கட்-ஆப் மதிப்பெண்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவர்களுக்கு இடம் கிடைக்காத சூழலில், அதனைத் தடுத்து மாநிலத்திற்குரிய வாய்ப்பைப் பெறத் தவறியதாகத் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசு உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மாநில உரிமையை நிலைநாட்டவும், இங்குள்ள மருத்துவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு ஆணை பெறப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஒன்றிய கவுன்சிலிங்கில் கட்-ஆப் குறைக்காமல் நடத்தப்பட வேண்டும் என்றும், அவ்வாறு நடத்தப்பட்டால் அந்த இடங்கள் மீண்டும் மாநிலத் தொகுப்புக்கே வந்துசேரும் என்றும் குறிப்பிட்ட அவர், கடந்த ஆட்சியில் செய்ய முடியாததை இந்த ஆட்சி சாதித்துக் காட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆந்திராவுக்குத் தொழில் நிறுவனங்கள் செல்வது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர்,
கடந்த காலத்தில் நிலவிய பார்ட்டி ஃபண்ட் நடைமுறையே நிறுவனங்கள் வெளியேறக் காரணம் என்றார். கடந்த இரண்டு மாதங்களாக நேர்மையான ஆட்சி நடந்து வருவதன் காரணமாகத் தற்போது மீண்டும் முதலீடுகள் தமிழகத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும், வரும் காலங்களில் தமிழ்நாடு முதலீடுகள் நிறைந்த முன்னணி மாநிலமாக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
செவிலியர்களின் வேலைவாய்ப்புப் போராட்டம் குறித்துப் பேசிய அவர், மாவட்ட நிர்வாகம் மூலமாக செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், செவிலியர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டுள்ளது என்றார்.
இருப்பினும், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதித்து நல்லதொரு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,
மேகதாது அணை விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடியிடம் தமிழகத்தின் நிலைப்பாடு தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழக முதல்வர் விஜய் அவர்களின் தலைமையில், அங்கு ஒரு செங்கலைக்கூட வைக்க அனுமதிக்க முடியாது என்பதும், எத்தகைய சூழலிலும் அதனை அனுமதிப்பதில்லை என்பதே தமிழக அரசின் தீர்க்கமான முடிவு என திட்டவட்டமாகக் கூறினார்.
கொளத்தூர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரப்படுவது குறித்த கேள்விக்கு,
அது மற்றவர்களுக்கும் பொருந்தும் என்று பதிலளித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam