Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 31 ஜூலை (ஹி.ச.)
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு மத்தியில், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களுக்கு இடையே, 1969-ம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் கொண்டுவரப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மக்களவை நடவடிக்கைகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன.
பின்னர் மீண்டும் கூடியபோதும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால், அவை நடவடிக்கைகள் திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், இந்த மசோதாவுக்கான கால அட்டவணை பணி ஆலோசனைக் குழுவில் (பி.ஏ.சி.) அனைத்து தரப்பினரின் ஒப்புதலுடன் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
சட்டமியற்றும் பணிகளில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும், முக்கியமான மசோதா நிறைவேற்றப்பட்டபோது அனைவரும் பங்கேற்க வேண்டும் என அரசு விரும்பியதாகவும் அவர் கூறினார்.
மேலும், விவாதம் இன்றி மசோதா நிறைவேற்றப்பட்டதாக வெளியே சென்று கூறுவது சரியல்ல என்றும் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA