Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 31 ஜூலை (ஹி.ச.)
முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தமிழக அரசின் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
இதற்கு காரணம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை தான்.
வரும் ஆகஸ்ட் மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் வழக்கமாக குறிப்பிடப்படும் 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' என்ற பெயர் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை. வெறுமனே பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இதேபோன்ற ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் தெளிவாக 'தாயுமானவர் திட்டம்' என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் இல்லம் தேடிச் சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் இந்த திட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திடீரென அதிகாரப்பூர்வ அறிக்கையில் தாயுமானவர் என்ற பெயர் தவிர்க்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது வெறும் அச்சுப் பிழையா அல்லது திட்டத்தின் பெயர் மாற்றப்பட உள்ளதற்கான முன்னோட்டமா அல்லது அரசு தரப்பில் இருந்து பெயரை குறிப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதா என்ற விவாதம் பரவலாக எழுந்துள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் அல்லது தமிழக அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
Hindusthan Samachar / vidya.b