ஆடு, மாடுகளுக்குத் தண்ணீரில் விஷம் வைக்கப்பட்டதா ? - கோவையில் 3 மாடுகள், 11 ஆடுகள் மர்ம முறையில் பலி
கோவை, 31 ஜூலை (ஹி.ச.) கோவை, தெலுங்குப்பாளையம் அருகே உள்ள சொக்கம்புதூர் மாசாணியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த பிரபா - ராமாவதி தம்பதியர் அப்பகுதியில் சொந்தமாக ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி இவருக்குச் சொந்தமா
ஆடு, மாடுகளுக்குத் தண்ணீரில் விஷம் வைக்கப்பட்டதா ? -  கோவையில் 3 மாடுகள், 11 ஆடுகள் மர்ம முறையில் பலி


கோவை, 31 ஜூலை (ஹி.ச.)

கோவை, தெலுங்குப்பாளையம் அருகே உள்ள சொக்கம்புதூர் மாசாணியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த பிரபா - ராமாவதி தம்பதியர் அப்பகுதியில் சொந்தமாக ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி இவருக்குச் சொந்தமான 3 மாடுகள் மற்றும் 11 ஆடுகள் அங்கு இருந்த பிளாஸ்டிக் டிரம் ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீரைக் குடித்து உள்ளன.

தண்ணீரைக் குடித்த சிறிது நேரத்திலேயே விலங்குகள் அனைத்தும் அடுத்தடுத்து மர்மமான முறையில் சுருண்டு விழுந்து, ஒரே மணி நேரத்திற்குள் பரிதாபமாக உயிரிழந்தன.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபா - ராமாவதி மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறைக்கும், விலங்குகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த கோவை மாவட்ட விலங்குகள் வதைத்தடுப்புச் சங்க அதிகாரி பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

விலங்குகள் குடித்த தண்ணீரில் யாரேனும் மர்ம நபர்கள் விஷம் கலந்தனரா ? அல்லது வேறு ஏதேனும் நச்சுத்தன்மை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதா ? என்ற கோணத்தில் காவல் துறையினரும் அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான விலங்குகளின் மாதிரிகள் மற்றும் டிரம் தண்ணீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

கோவையில் ஒரே நேரத்தில் 14 கால்நடைகள் மர்மமாக பலியான சம்பவம் விவசாயிகள் இடையே சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / vidya.b