கட்சிப் பெயர் மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு – டி .ஆர்.எஸ் தலைவர் கவிதா கடும் எதிர்ப்பு
தெலுங்கானா , 04 ஜூலை (ஹி.ச.) தெலங்கானாவில் புதிய அரசியல் கட்சியை பதிவு செய்ய முயற்சித்து வரும் முன்னாள் எம்எல்ஏ கல்வகுந்த்லா கவிதாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘தெலங்கானா ரக்ஷண சேனா (TRS)’ என்ற பெயரில் கட்சி பதிவு
A


தெலுங்கானா , 04 ஜூலை (ஹி.ச.)

தெலங்கானாவில் புதிய அரசியல் கட்சியை பதிவு செய்ய முயற்சித்து வரும் முன்னாள் எம்எல்ஏ கல்வகுந்த்லா கவிதாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

‘தெலங்கானா ரக்ஷண சேனா (TRS)’ என்ற பெயரில் கட்சி பதிவு செய்ய தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட எதிர்ப்புகள் வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், கட்சிப் பெயரை மாற்ற வேண்டும் என்றும், அதற்காக 15 நாட்களுக்குள் மூன்று மாற்றுப் பெயர்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் புதிய பெயர்கள் வழங்கப்படாவிட்டால், கட்சி பதிவு விண்ணப்பம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் முடிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுறுத்தலை கல்வகுந்த்லா கவிதா கடுமையாக எதிர்த்துள்ளார்.

ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய மாற்றுப் பெயர்கள் அனுப்பும் எண்ணமே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

‘தெலங்கானா ரக்ஷண சேனா’ என்ற பெயரிலேயே கட்சியை முன்னெடுத்து செல்லப்போவதாகவும், தேவையெனில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நீதிமன்றத்தில் எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்த ஆண்டு பிப்ரவரியில் கவிதா தனது புதிய கட்சிக்காக ஐந்து பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரைத்திருந்தார்.

பின்னர் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயரை ‘தெலங்கானா ராஷ்டிர சேனா (TRS)’ என அறிவித்து கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மூன்று நாட்களில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் அந்தப் பெயர் ‘தெலங்கானா ரக்ஷண சேனா’ என மாற்றப்பட்டது.

தற்போது அதே பெயரில் கட்சி செயல்பட்டு வரும் நிலையில், மீண்டும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவு தெலங்கானா அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA