Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூலை (ஹி.ச.)
.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் கொலை, பாலியல் வன்கொடுமை, தாக்குதல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை சுட்டிக்காட்டி, மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து,அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோட்டில் காதலிக்க மறுத்த 19 வயது இளம்பெண்ணை நடுரோட்டில் கத்தியால் குத்திய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கல்லிடைக்குறிச்சி அருகே சிறுவன் உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே காணாமல் போன 17 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், ஆற்காடு அருகே கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் நபர் 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மற்றும் திருச்சி அருகே கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட நபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் உள்ளிட்டவை மாநிலத்தில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புவதாக தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் குறுகிய கால இடைவெளியில் நடைபெற்றுள்ள நிலையில், பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு தவறிவிட்டதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், சட்டம் - ஒழுங்கை வலுப்படுத்தவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும், மாநிலத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அதிமுக வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ