மதுரை கொட்டாம்பட்டியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும் – அமைச்சர் விஸ்வநாதன் உறுதி
மதுரை, 05 ஜூலை (ஹி.ச.) மதுரை மேலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசுகையில் மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி பகுதியில் புதிய அரசு மகளிர் கலைக் கல்லூரி விரைவில் தொடங்கப்படு
மதுரை கொட்டாம்பட்டியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி விரைவில் – அமைச்சர் விஸ்வநாதன் உறுதி


மதுரை, 05 ஜூலை (ஹி.ச.)

மதுரை மேலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசுகையில் மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி பகுதியில் புதிய அரசு மகளிர் கலைக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும் எனும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றிய அமைச்சர் விஸ்வநாதன் கூறுகையில்,

கிராமப்புற மாணவிகளின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் நோக்கில் தமிழக அரசு தொடர்ந்து புதிய கல்லூரிகளை திறந்து வருகிறது.

அந்த வரிசையில், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிக விரைவில் இக்கல்லூரி செயல்பாட்டுக்கு வரும்.

கொட்டாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற மாணவிகள் உயர்கல்வி பயில அருகில் கல்லூரி இல்லாத குறையை இக்கல்லூரி தீர்க்கும். இதனால் நூற்றுக்கணக்கான மாணவிகள் பயனடைவர்.

தமிழ்நாட்டில் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், இந்த ஆண்டு மட்டும் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக கே.வி.குப்பம், துறையூர், உளுந்தூர்பேட்டை, செங்கம் ஆகிய 4 இடங்களில் கூடுதல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், புதிதாக தொடங்கப்படும் ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 5 பாடப்பிரிவுகள், 12 உதவிப் பேராசிரியர்கள், 14 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் உருவாக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் ஒரு கல்லூரிக்கு சுமார் 280 மாணவிகள் வரை சேர்ந்து பயில வாய்ப்பு கிடைக்கும்.

கிராமப்புற மாணவிகள் உயர்கல்வியை தொடர “புதுமைப் பெண்” திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

கொட்டாம்பட்டி மகளிர் கல்லூரி தொடங்கப்படுவதால் மேலூர், நத்தம், அலங்காநல்லூர் சுற்றுவட்டார மாணவிகளின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுவதாக பெற்றோர்களும் கல்வியாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கல்லூரிக்கான இடத்தேர்வு மற்றும் கட்டடப் பணிகள் தொடர்பான அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b