Enter your Email Address to subscribe to our newsletters

ஜம்மு-காஷ்மீர், 07 ஜூலை (ஹி.ச.)
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தின் தத்ரி பகுதியின் மேல்பகுதியில், இன்று அதிகாலை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தன.
இன்று அதிகாலை, உள்ளூர் மக்கள் பல சேதமடைந்த கட்டிடங்களையும் நசுங்கிய வாகனங்களையும் கண்டனர்.
சாலையெங்கும் சிதறிக்கிடந்த கற்களும் குப்பைகளும் காரணமாக, மக்கள் அவற்றின் மீது ஏறி நின்று சேதங்களை ஆய்வு செய்தனர். ஏராளமான வாகனங்கள் கவிழ்ந்த நிலையில், கற்கள் மற்றும் சேற்றுக்குள் மூழ்கியது போல் காணப்பட்டன.
தற்போது வரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. மேல் தத்ரி நகருக்குள் சேறு, பாறைகள் மற்றும் குப்பைகள் புகுந்து சென்றன.
இது குறித்து அப்பகுதியின் தாசில்தார் சதீஷ் ராணா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முதற்கட்ட ஆய்வின்படி, சரிந்த மண் மற்றும் குப்பைகளால் குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்துள்ளன.
நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய கனமழை, மேக வெடிப்பு காரணமாக இருக்கலாம். பெருமளவு குப்பைகள் வந்ததால் மக்களின் வீடுகள் சேதமடைந்து, சேற்று நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. முதற்கட்ட கணக்கீட்டின்படி, சுமார் 10 வீடுகளும் 25 கடைகளும் சேதமடைந்துள்ளன.
என்று அவர் தெரிவித்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட தகவலின்படி, நேற்று (ஜூலை 6-ஆம் தேதி) தோடாவில் இயல்பை விட அதிக மழை பதிவாகியுள்ளது. வழக்கமான 4.1 மி.மீ.க்கு பதிலாக 26.6 மி.மீ. மழை பெய்துள்ளது.
கிஷ்த்வார், உதம்பூர், ரியாசி, ஜம்மு, சம்பா மற்றும் கதுவா ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழை பதிவாகியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b