Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 08 ஜூலை (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெரும் அளவில் குட்கா கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பல்லடம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சோதனையின் போது, பெங்களூருவில் இருந்து சொகுசு காரில் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட சுமார் 120 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து குட்காவை கடத்தி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது ரியாஸ் மற்றும் முகமது அஷ்ரப் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களின் விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாநிலங்களில் இருந்து தொடர்ந்து கடத்தி வரப்படுவது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கடத்தலின் பின்னணியில் யார் உள்ளனர், பல்லடத்தில் யாருக்கு விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b