ராய்காட் வெள்ளம் - 3,000 எரிவாயு சிலிண்டர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அவலம்
ராய்காட், 09 ஜூலை ( ஹி.ச) மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் கலாப்பூர் பகுதியில் பெய்த கனமழை மற்றும் கடும் வெள்ளம் காரணமாக பெரும் தொழில்துறை அவசர நிலை ஏற்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) பாட்டிலிங் ஆலையில் இ
ராய்காட் வெள்ளம் - 3,000 எரிவாயு சிலிண்டர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அவலம்


ராய்காட், 09 ஜூலை ( ஹி.ச)

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் கலாப்பூர் பகுதியில் பெய்த கனமழை மற்றும் கடும் வெள்ளம் காரணமாக பெரும் தொழில்துறை அவசர நிலை ஏற்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) பாட்டிலிங் ஆலையில் இருந்து சுமார் 3,000 எரிவாயு சிலிண்டர்கள் பாதல்கங்கை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பன்வேல் தாலுகாவின் சாவனே பகுதியில் உள்ள ஹெச்.பி.சி.எல் பாட்டிலிங் ஆலையில் நடந்துள்ளது. கலாப்பூர் தாலுகாவில் பெய்த கனமழையால் பாதல்கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வலுவான நீரோட்டத்தில், நிரப்பப்பட்ட மற்றும் காலியான சிலிண்டர்கள் பெருமளவில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

இச்சம்பவத்தை கலாப்பூர் காவல் ஆய்வாளர் அபிஜித் புஜ்பால் உறுதி செய்தார். இதையடுத்து, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராய்காட் மாவட்ட ஆட்சியர் கிஷன் ஜவாலே, ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆற்றிலோ அல்லது கரையோரங்களிலோ எரிவாயு சிலிண்டர் காணப்பட்டால், எக்காரணம் கொண்டும் அதைத் தொடக்கூடாது. அதை நகர்த்தவோ அல்லது வீட்டிற்கு எடுத்துச் செல்லவோ முயற்சிக்க வேண்டாம்

அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்களின் தொழில்நுட்ப நிலை அல்லது எரிவாயு அளவைக் கண்டறிவது சாத்தியமில்லை என்பதால் அதிக ஆபத்து உள்ளதாக நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

சிலிண்டர்களைச் சேதப்படுத்தினால் பேரழிவை ஏற்படுத்தும் எரிவாயு கசிவு அல்லது வெடிப்பு ஏற்பட்டு, உயிர் மற்றும் உடைமைக்குப் பெரும் சேதம் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தற்போது, காணாமல் போன சிலிண்டர்களைத் தேடும் பணியை மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பான தூரத்தில் இருக்குமாறும், சிலிண்டர் கண்டெடுக்கப்பட்டால் உடனடியாக உள்ளூர் காவல்துறை அல்லது பேரிடர் மேலாண்மைத் துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்களைத் தடுக்கவும், காணாமல் போன சிலிண்டர்களை மீட்கவும் மீட்புக் குழுவினர் பாதல்கங்கை ஆற்றைக் கண்காணித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b