Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 09 ஜூலை (ஹி.ச.)
மும்பையில் உள்ள கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி (KDMC) மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை சிவசேனா கார்ப்பரேட்டர் ரமேஷ் ம்ஹாத்ரே தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையடுத்து, டோம்பிவிலியில் உள்ள விஷ்ணுநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 132 மற்றும் 121(1) ஆகிய பிரிவுகளின் கீழ் ம்ஹாத்ரே கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள டோபிவாலா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் பி.ஒய்.எல் நாயர் தொண்டு மருத்துவமனையில் பணியாற்றும் உறைவிட மருத்துவர்கள், கேடிஎம்சி சாஸ்திரிநகர் மருத்துவமனையில் மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று கருப்பு ரிப்பன் அணிந்து ஆதரவு போராட்டம் நடத்தினர்.
மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் முன் மருத்துவத் துறைகளைச் சேர்ந்த அனைத்து மருத்துவர்களும் பணியின் போது கருப்பு ரிப்பன் அணிந்து பங்கேற்றதாக மகாராஷ்டிர உறைவிட மருத்துவர்கள் சங்கம் தெரித்துள்ளது.
இந்த அமைதியான போராட்டத்தால் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் மருத்துவமனைச் சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகள் சேவைகள், அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சுகாதார சேவைகளும் தடையின்றி தொடர்ந்து நடைபெற்றன.
மருத்துவப் பணியாளர்கள் மீதான அனைத்து வன்முறைச் செயல்களையும் நாயர் MARD கடுமையாகக் கண்டித்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் பாதுகாப்பான சூழலில் பணியாற்றும் உரிமையை வலியுறுத்தியுள்ளது.
ஒற்றுமையுடன் பங்கேற்ற அனைத்து உறைவிட மருத்துவர்களுக்கும் சங்கம் நன்றி தெரிவித்ததுடன், குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், சுகாதார நிறுவனங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும், மருத்துவப் பணியாளர்கள் மீதான வன்முறைக்கு ‘சகிப்புத்தன்மையற்ற’ கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b