போகாபுரம் விமான நிலையத்துக்கு பெருமை யாருக்கு? -ஜெகன் ஆட்சியிலேயே அடித்தளம் அமைக்கப்பட்டதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தகவல்
விசாகப்பட்டினம் , 01 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆந்திர மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள போகாபுரம் சர்வதேச விமான நிலையம் பிரதமர் நரேந்திர மோடியால் இன்று திறந்து வைக்கப்பட்ட நிலையில், இந்தத் திட்டத்திற்கான பெருமையை பெறுவதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்
A


விசாகப்பட்டினம் , 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆந்திர மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள போகாபுரம் சர்வதேச விமான நிலையம் பிரதமர் நரேந்திர மோடியால் இன்று திறந்து வைக்கப்பட்ட நிலையில், இந்தத் திட்டத்திற்கான பெருமையை பெறுவதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

விமான நிலைய திறப்பு விழாவை தொடர்ந்து, முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு தான் போகாபுரம் விமான நிலைய திட்டத்துக்கு அடித்தளம் அமைத்ததாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கட்சி தனது எக்ஸ் தள பதிவில், போகாபுரம் விமான நிலைய திட்டத்தை கனவில் இருந்து நனவாக்கும் பயணத்தை தொடங்கியது யார் என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஜெகன் ஆட்சிக் காலத்தில் விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதாகவும், இதற்காக ரூ.1,200 கோடி செலவிடப்பட்டதாகவும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கூறியுள்ளது. நிலம் வழங்கிய குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளும் தங்கள் ஆட்சியிலேயே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.

விமான நிலையத்துக்குத் தேவையான சுற்றுச்சூழல் அனுமதி, விமானப் போக்குவரத்து தொடர்பான அனுமதிகள் உள்ளிட்ட முக்கிய ஒப்புதல்கள் அனைத்தும் ஜெகன் ஆட்சியிலேயே பெறப்பட்டதாகவும், விமான நிலையத்தை இணைக்கும் சாலைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கான நடவடிக்கைகளும் அப்போது தொடங்கப்பட்டதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

ஆனால், தற்போதைய என்.டி.ஏ. கூட்டணி அரசு இந்தத் திட்டத்தில் பெரிய பங்கு இல்லாத நிலையிலும், முழு பெருமையையும் தங்களுக்கு எடுத்துக் கொள்ள முயற்சிப்பதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதனால், போகாபுரம் சர்வதேச விமான நிலையத்தின் தொடக்கம் மற்றும் நிறைவு பணிகளில் யாருடைய பங்கு முக்கியமானது என்ற அரசியல் விவாதம் ஆந்திராவில் மீண்டும் எழுந்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA