Enter your Email Address to subscribe to our newsletters

மொராதாபாத், 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
உத்திரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காலனி பகுதியில் இயங்கி வந்த மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிகாலை நேரத்தில் திடீரென தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மெழுகு, ரசாயனப் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய மூலப்பொருட்கள் அதிக அளவில் இருப்பதால் தீ மளமளவென பரவி தொழிற்சாலை முழுவதையும் சூழ்ந்ததாக கூறப்படுகிறது.
இது குடியிருப்பு பகுதி என்பதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் உயிரிழப்பு குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னரே பாதிப்பு குறித்து தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b