Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ரூ.2 கோடிக்கு சட்ட விரோதமாக தனி நபர்களுக்கு கடந்த ஜூலை 6-ம் தேதி பத்திரப் பதிவு செய்து கொடுத்தார்.
இந்த விவகாரத்தில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அதே நாளில், பழனியில் உள்ள ரூ.60 கோடி மதிப்பிலான 1.66 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ரூ.20 லட்சத்துக்கு தனிநபருக்கு அவர் பதிவு செய்து கொடுத்துள்ளதாக மேலும் ஒரு புகார் எழுந்தது.
இதுதவிர, அவர் மீது சில புகார்கள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், தனது பணிக்காலத்தில் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் ஆராய 6 பேர் கொண்ட சிறப்பு தணிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் இடம்பெற்றுள்ள உதவி பதிவுத்துறை தலைவர் சீனிவாசன் தலைமையிலான அதிகாரிகள் இன்று
(ஆகஸ்ட் 01) காலை பழநி மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு, ஜஸ்டின் மணிகண்டன் பணியாற்றிய போது, பதிவு செய்த அனைத்து வகை ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, ஜஸ்டின் மணிகண்டன், பழனி பதிவு மாவட்டத்தில் பணியாற்றிய ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, வடமதுரை ஆகிய அலுவலங்களுக்கு 3 பிரிவாக பிரிந்து சென்ற சிறப்பு குழுவினர் அங்கு அனைத்து ஆவண பதிவுகளையும் ஆய்வு செய்து, முறைகேடு நடந்துள்ளதா? என தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அடுத்த 3 நாட்களுக்குள் ஆய்வு தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் 6-வது நாளாக ஆஜரானார்.
அவரிடம், டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நாளை மறுநாள் (ஆகஸ்ட 3) அவருக்கு வழங்கப்பட்டுள்ள நிபந்தனை ஜாமீன் முடிவடைய உள்ள நிலையில், அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த நில மோசடி தொடர்பாக, ஏற்கெனவே நிலத்தை விற்றவர், வாங்கியோர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b