Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் 'மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027'-ன் முதற்கட்டப் பணியான 'வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு'
(House Listing and Housing Census) இன்று முதல் தொடங்கி ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளது.
முன்னதாக, இக்கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணியான 'சுய-கணக்கெடுப்பு'
(Self-Enumeration) நடவடிக்கை ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை நடைபெற்று முடிவடைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகத்தால் (தூத்துக்குடி மாநகராட்சியைப் பொறுத்தமட்டில் மாநகராட்சி ஆணையரால்) நியமிக்கப்பட்ட கணக்கெடுப்பு அலுவலர்கள், உரிய அடையாள அட்டையுடன் ஒவ்வொரு வீடாக நேரில் வருவார்கள்.
குடும்பங்களின் வீட்டு வசதி, குடும்பப் பொருட்கள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான விவரங்கள் 34 கேள்விகள் வாயிலாக 'வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு' (HLO) மொபைல் செயலி மூலம் சேகரிக்கப்படும்.
ஏற்கனவே இணையவழியில் சுய-கணக்கெடுப்பு செய்த குடும்பங்கள், தங்களுக்குக் கிடைத்த 12 இலக்க 'சுய-கணக்கெடுப்பு ஐடி'
(Self-Enumeration ID) எண்ணை வீட்டிற்கு வரும் அலுவலரிடம் வழங்கினால் போதுமானது. இது பணியை விரைவாக முடிக்க உதவும்.
பொதுமக்கள் வழங்கும் அனைத்துத் தகவல்களும் மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் (Census Act) விதிகளின்படி முழுமையான இரகசியத்தன்மையுடன் பாதுகாக்கப்படும். எனவே, பொதுமக்கள் எவ்விதத் தயக்கமும் இன்றித் துல்லியமான தகவல்களை வழங்கலாம்.
இக்கணக்கெடுப்பு தரவுகளே எதிர்காலத் திட்டமிடல், அரசு நலத்திட்டங்கள் மற்றும் மாவட்டத்தின் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்கான முதன்மை ஆதாரமாக அமையும்.
இக்கணக்கெடுப்பு தொடர்பாகச் சந்தேகங்கள் இருப்பின் பொதுமக்கள் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அம்மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.
உதவி எண்கள்
கட்டணமில்லா எண்: 1855
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை: 0461-2340099
செல்பேசி எண்: 9486454714
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இக்கணக்கெடுப்புப் பணி, நாட்டின் வளர்ச்சிக்கும் நலத்திட்டங்களை வடிவமைப்பதற்கும் அடித்தளமாக அமையும் என்பதால், தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் தங்கள் வீடு தேடி வரும் கணக்கெடுப்புப் பணியாளர்களுக்குப் போதிய ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b