கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கான தடை கோரிய வழக்கு - உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்ப மதுரைக் கிளை உத்தரவு
மதுரை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம், விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த லிபின் பொன்னுசுவாமி லீலா, கம்பத்தைச் சேர்ந்த அருண் அரவிந்த் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடையை
கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கான தடை கோரிய வழக்கு - உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்ப மதுரைக் கிளை உத்தரவு


மதுரை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம், விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த லிபின் பொன்னுசுவாமி லீலா, கம்பத்தைச் சேர்ந்த அருண் அரவிந்த் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடையை நீக்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களில் கூறியிருப்பதாவது,

நாங்கள் அனுமதி பெற்று கல் குவாரி நடத்தி வருகிறேன். இந்தச் சூழலில் வெளி மாநிலங்களுக்கு ஜல்லிக் கற்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களுடைய தொழில் பாதிக்கப்படுகிறது.

எனவே, பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதித்து கனிம வளத்துறை இயக்குநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுக்களில் கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தண்டபாணி, திலீப் குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இதுபோன்ற ஒரு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்து நிலுவையில் உள்ளது என வாதிடப்பட்டது.

மனுதாரர் தரப்பில், ஏற்கனவே இந்த வழக்கு இங்கு விசாரணையில் உள்ளது. வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு இந்த மனுக்களை பதிவுத் துறை அனுப்ப வேண்டும்.

மனுக்களை எங்கு விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்வார் எனவும் கூறி உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / vidya.b