Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு கொண்டுவரும் தனித் தீர்மானத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய அவர்,
நாடு முழுவதும் வெறும் 1.40 லட்சம் எம்பிபிஎஸ் இடங்களுக்காக சுமார் 23 லட்சம் மாணவர்கள் போட்டியிடும் சூழல் நிலவுவதாக சுட்டிக்காட்டினார்.
தரமான மருத்துவக் கல்வியை உறுதி செய்யவும், மருத்துவக் கல்வியை வணிகமயமாவதில் இருந்து தடுக்கவுமே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக அரசு தரப்பில் காரணம் கூறப்படுவதாகவும், ஆனால் நடைமுறையில் அதற்கு நேர்மாறாகவே நடந்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் பெரும் தொகையை செலுத்தி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். இதன் மூலம் மருத்துவக் கல்வி மேலும் வணிகமயமாகியுள்ளது என்று அவர் வேதனை தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வுக்கான பயிற்சி என்ற பெயரில் நாடு முழுவதும் மிகப்பெரிய வணிகம் நடைபெற்று வருவதாகவும், பயிற்சிக் கட்டணமாக மட்டும் ஆண்டுதோறும் சுமார் 1.50 லட்சம் கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும் பாமக எம்எல்ஏ சௌமியா குறிப்பிட்டார்.
நீட் தேர்வு என்பது அறிவு சார்ந்த தேர்வு அல்ல, அது மாணவர்களின் உண்மையான திறமையை மதிப்பிடுவதில்லை. எனவே நீட் தேர்வு தேவையே இல்லை என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்கம் முதலான நிலைப்பாடு என்றும், அதன் அடிப்படையிலேயே இந்த ரத்து தீர்மானத்தை தங்கள் கட்சி ஆதரிப்பதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b