Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால், குடும்பத்தில் அமைதியும் வளமும் பெருகும் என்பது நம்பிக்கை.
இதனையொட்டி, ஆடி அமாவாசை தினமான இன்று அதிகாலை முதலே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய கடற்கரைப் பகுதிகளான திரேஸ்புரம், ரோச் பூங்கா கடற்கரை மற்றும் புதிய துறைமுகக் கடற்கரைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்ப சமேதராகக் கூடினர்.
கடலில் புனித நீராடிய பக்தர்கள், கடற்கரையில் அமர்ந்து புரோகிதர்கள் மூலமாகத் தங்கள் முன்னோர்களின் நினைவாகப் எள், தண்ணீர் தெளித்துத் தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து, முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையக் வேண்டிப் பிண்டம் கரைத்து சிறப்புப் பூஜைகள் செய்தனர்.
மேலும், கோவில்களிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. சுவாமி தரிசனம் செய்யக் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
ஆடி அமாவாசை வழிபாட்டையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை சார்பில் கடற்கரைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Hindusthan Samachar / vidya.b