Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, பொதுமக்கள் தங்கள் சாதிப் பெயரை தாங்களே எழுதும் முறைக்குப் பதிலாக, மத்திய அரசு வெளியிடும் சாதிகள் பட்டியலில் இருந்து தங்களது சாதியை தேர்வு செய்யும் முறையை கடைபிடிக்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
மேலும், சாதி விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் காலியாக விடப்பட்டுள்ள பகுதியில் அப்படியே பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும் என அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு சாதியிலும் பல்வேறு உட்பிரிவுகள் உள்ள நிலையில், மக்கள் தங்கள் சாதியின் பெயருக்குப் பதிலாக உட்பிரிவின் பெயரை குறிப்பிடும் வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் உண்மையான சாதிகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமான சாதிகள் இருப்பதாக கணக்கிடப்படும் நிலை ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பில் இதே நடைமுறை பின்பற்றப்பட்டதால், நாடு முழுவதும் 46.70 லட்சம் சாதிகள் இருப்பதாக தரவுகள் வெளியாகின. இதன் காரணமாக அந்தக் கணக்கெடுப்பு தரவுகளை சமூகநீதிக்காக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு தீர்வாக, மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் உள்ள சாதிகள் பட்டியலை சாதிவாரி கணக்கெடுப்புக்கான செயலியில் இணைத்து, அதிலிருந்து பொதுமக்கள் தங்களது சாதியை தேர்வு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும் என அன்புமணி கோரியுள்ளார்.
2023ஆம் ஆண்டு பிகார் மற்றும் 2024ஆம் ஆண்டு தெலுங்கானாவில் நடைபெற்ற சாதிவாரி சர்வேகளில் இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்பட்டதாகவும், அதன் மூலம் துல்லியமான தகவல்களை பெற முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது மத்திய அரசின் சாதிகள் பட்டியலில் இருந்து சாதியை தேர்வு செய்து பதிவு செய்யும் முறையை பின்பற்றுமாறு இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகத்திற்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam