Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தில் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான ஊக்கத்தொகைகளையும் வருகிற டிசம்பர் மாதம் முதல் தனி எஸ்க்ரோ கணக்குகளில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன் மூலம் ஊக்கத்தொகை நிதியின் பயன்பாட்டை வெளிப்படையாகவும், திறம்படவும் கண்காணிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில அளவிலான முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (SIPB) 20-வது கூட்டம் ஆந்திர தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் தொழில், எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த 25 திட்டங்களின் மூலம் ஆந்திர மாநிலத்திற்கு ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 406 கோடி முதலீடு வருவதுடன், 21 ஆயிரத்து 627 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ரூ.13.78 லட்சம் கோடி முதலீடு
இதுவரை நடைபெற்ற 20 SIPB கூட்டங்களில் மொத்தம் 363 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களின் மூலம் மாநிலத்திற்கு ரூ.13 லட்சத்து 78 ஆயிரம் கோடி முதலீடும், 10 லட்சத்து 86 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு,
மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கத்தொகைகள் அவசியம் என்றாலும், அவற்றை எந்த அளவுக்கு வழங்க முடியும் என்பது குறித்து தெளிவான திட்டமிடல் இருக்க வேண்டும் என்று கூறினார்.
ஊக்கத்தொகை வழங்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்றும், நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நவீன தொழில்களுக்கு முக்கியத்துவம்
பாரம்பரிய தொழில்களுடன் மட்டும் நின்றுவிடாமல், எதிர்கால தேவைகளுக்கு ஏற்ற தொழில்களில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக பசுமை அமோனியா, லித்தியம் பேட்டரிகள், ரோபோட்டிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கான கொள்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், தொழில் திட்டங்களால் பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை அவர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூற வேண்டும் என்றும், திட்டங்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
டேட்டா சென்டர்களுக்கு 3.5 டி.எம்.சி. தண்ணீர்
வட ஆந்திராவில் அமைக்கப்பட்டு வரும் டேட்டா சென்டர்களுக்கு 3.5 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
போலவரம் இடது கால்வாய் மூலம் ஈர்ப்பு விசை அடிப்படையில் விசாகப்பட்டினத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
கிராமப்புறங்களிலும் தொழில் திட்டங்களை அமைத்து அந்தந்த பகுதிகளின் வளர்ச்சிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் பாதுகாப்புத்துறை திட்டங்கள் நாட்டுக்கே பெருமை சேர்க்கக்கூடியவை என்று குறிப்பிட்ட அவர், புட்டபர்த்தி அருகே பாதுகாப்புத்துறை திட்டங்களும், இந்துப்பூர் பகுதியில் விண்வெளி மற்றும் விமானத்துறை சார்ந்த திட்டங்களும் அமைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
மூலப்பேட்டை துறைமுகம்
மூலப்பேட்டை துறைமுக கட்டுமானப் பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
ராயலசீமாவில் விளையும் தோட்டக்கலைப் பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு விரைவாக கொண்டு செல்வதற்கு சாலை, ரெயில் மற்றும் துறைமுக இணைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
175 தொகுதிகளில் எம்.எஸ்.எம்.இ. பூங்காக்கள்
வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலத்தின் 175 சட்டமன்ற தொகுதிகளிலும் எம்.எஸ்.எம்.இ. தொழில் பூங்காக்களை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
மேலும், “ஒரு குடும்பம்–ஒரு தொழில்முனைவோர்” திட்டத்தை பெரிய அளவில் செயல்படுத்தி, கிராமப்புறங்களில் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA