Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
குற்ற வழக்கு குறித்த தகவலை மறைத்து காவலர் பணிக்கு விண்ணப்பித்த நபருக்கு பணி வழங்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குமரன், தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில் பங்கேற்று எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றதுடன், நேர்முகத் தேர்விலும் பங்கேற்றார். ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டு அவர் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு குறித்த தகவலை விண்ணப்பத்தில் மறைத்ததாகக் கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
அந்த வழக்கில் குமரன் 2018ஆம் ஆண்டே விடுதலை செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து, தனக்கு காவலர் பணி வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, குமரனின் விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து காவல்துறை மீண்டும் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது. இதனை எதிர்த்து குமரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அவருக்கு காவலர் பணி வழங்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, குமரன் குற்ற வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், காவலர் பணிக்கான விண்ணப்பத்தில் தமக்கு எதிராக எந்தக் குற்ற வழக்கும் இல்லை எனக் குறிப்பிட்டிருப்பது தெரியவந்தது.
குற்ற வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், அந்த வழக்கு குறித்த தகவலை விண்ணப்பத்தில் மறைத்தது உண்மையே எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், காவல்துறை அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது சரியானதே எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, குமரனுக்கு காவலர் பணி வழங்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam