தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் அவசியமற்றது - டிடிவி தினகரன்
சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்தின் தலையாய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் என தவெக அரசை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியி
Resolution against constituency delimitation is unnecessary – TTV Dhinakaran


சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்தின் தலையாய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் என தவெக அரசை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,

தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் கொண்டு வராத நிலையில் அதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசினர் தீர்மானம் அவசியமற்றது!

நாடாளுமன்ற மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகவே இருக்க வேண்டும், மாநிலங்களுக்கான விகிதாச்சார அளவில் தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் உள்ளிட்டவை அடங்கிய தொகுதி மறுவரையறை தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றத்தில் இன்று கொண்டு வந்துள்ளார்.

மத்திய அரசு, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடாத நிலையில், காவிரி நீர், மேகதாது அணை, விவசாயிகள் பெற்ற முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, மின் கட்டணத்தில் குளறுபடி, போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற தமிழகத்தின் தற்போதைய தலையாய பிரச்னைகளை மறைக்க, தொகுதி மறுவரையறை தொடர்பாக எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டியதோடு, தற்போது சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானம் என்ற மற்றொரு நாடகத்தையும் தவெக அரசு அரங்கேற்றியுள்ளது.

தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் தொகுதி மறுவரையறை தொடர்பாக பேசிவிட்டுச் சென்ற அடுத்த வாரமே எம்.பி.க்கள் கூட்டம், அதற்கு அடுத்த வாரமே அரசினர் தீர்மானம் என அவசரகதியில் அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ஆளும் தவெக அரசை காங்கிரஸ் கட்சிதான் இயக்குகிறதோ? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அனைவரும் ஏற்றுக்கொண்ட நிலையில், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உட்பட எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படாது என்பதோடு, நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவிகிதத்திலிருந்து 7.23 சதவிகிதமாக அதிகரிக்கும் என மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் தெளிவுபடுத்திய பின்பும், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிப்படையும் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை தமிழக மக்கள் மத்தியில் தற்போது தவெக அரசு திட்டமிட்டு பரப்புவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, கடந்த மூன்று மாத கால தவெக ஆட்சியில் தினந்தோறும் எழும் மக்கள் பிரச்னைகளைத் திசைதிருப்பவும், காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தனது இயலாமையை மறைக்கவும், இதுபோன்ற தற்போதைய அவசியமற்ற விஷயங்களை சட்டமன்றத்தில் கொண்டு வந்து காலத்தை வீணாக்காமல், தமிழகத்தின் தலையாய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b