Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச)
சென்னை அருகே அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு 10 மணி அளவில் சென்ற ஆட்டோவிற்குள்ளிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் திடீரென கேட்டுள்ளது. அதைக் கவனித்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அடுத்த சில வினாடிகளில், உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் ஆட்டோவில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றபோது 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.
போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த அப்பெண் மேனாம்பேடு பகுதியில் வசித்து வரும் அனிதா என தெரியவந்துள்ளது.
மேலும் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணை ஆட்டோவுக்குள்ளேயே வைத்து கத்தியால் சரமாரியாக வெட்டியதும், வலி தாங்காமல் அந்த பெண் சத்தமிட்டு கதறியதால் ஆட்டோவில் இருந்து வெளியே தூக்கி வீசிவிட்டு அதே ஆட்டோவில் மர்ம கும்பல் தப்பியோடியதும் தெரியவந்துள்ளது.
நேற்று இரவு நடைபெற்ற இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் என்ன, கொலையாளிகள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b