பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் பலி,தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்
தமிழ்நாடு, 13 ஆகஸ்ட் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமி
ஜி.கே.வாசன்


தமிழ்நாடு, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து,தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து, அவர்கள் விரைவில் குணமடைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து வெடி விபத்துகள் ஏற்படுவது கவலைக்குரியது என தெரிவித்துள்ள ஜி.கே.வாசன், தொழிலாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பட்டாசு ஆலை நிர்வாகங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், தமிழக அரசு பட்டாசு ஆலைகளை தொடர்ந்து கண்காணித்து, அவை பாதுகாப்பான முறையில் இயங்குகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam