ஆன்லைனில் மது முன்பதிவு திட்டத்திற்கு எதிர்ப்பு - நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச) தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் மதுபானங்களை முன்பதிவு செய்யும் திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அண்மையில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் மது ம
ஆன்லைனில் மது முன்பதிவு திட்டத்திற்கு எதிர்ப்பு - நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்


சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச)

தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் மதுபானங்களை முன்பதிவு செய்யும் திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அண்மையில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் மது முன்பதிவு வசதிக்கான அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் பாலு என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், அரசின் இந்த நடவடிக்கை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் முரணானது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக மது அருந்துவோருக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து வீட்டிற்கே டெலிவரி செய்வது போன்ற வசதிகளை அரசே செய்து கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இது போன்ற நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் இளைஞர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும் என்றும், சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும்.

ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசியமான ரேஷன் பொருட்களை வாங்குவதற்குக் கூட ஆன்லைனில் முன்பதிவு செய்யும் எந்த வசதியும் இல்லாத நிலையில், மதுபானம் போன்ற போதைப் பொருளுக்கு மட்டும் இத்தகைய நவீன தொழில்நுட்ப வசதியை அரசு செய்து தருவது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

எனவே, பொது நலனுக்கு எதிரானதும், மக்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் அமைந்துள்ளதுமான ஆன்லைன் மது முன்பதிவிற்கான அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b