தெலுங்கானாவில் அரிசி ஆலைகளில் அதிரடி சோதனை - ரூ.700 கோடி நெல் நிலுவை மீட்பு
ஐதராபாத், 13 ஆகஸ்ட் (ஹி.ச.) தெலுங்கானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான நெல் நிலுவையை திரும்பச் செலுத்தாத அரிசி ஆலை அதிபர்கள் மீது மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விஜிலென்ஸ் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சி
A


ஐதராபாத், 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

தெலுங்கானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான நெல் நிலுவையை திரும்பச் செலுத்தாத அரிசி ஆலை அதிபர்கள் மீது மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, விஜிலென்ஸ் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக பல்வேறு அரிசி ஆலைகளில் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகளில் சுமார் ரூ.900 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான நெல் இருப்பு மாயமானது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அரசு கடும் எச்சரிக்கை விடுத்த நிலையில், இதுவரை சுமார் ரூ.700 கோடி அளவிலான நிலுவைத் தொகை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் குடிமைப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி ஆகியோர் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினர்.

அப்போது, அரசுக்கு சொந்தமான ஒவ்வொரு தானியத்தின் மதிப்பையும் முழுமையாக மீட்க வேண்டும் என்றும், முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதே நேரத்தில், அரசுடன் நேர்மையாக இணைந்து செயல்படும் அரிசி ஆலை அதிபர்களுக்கு அரசு தொடர்ந்து தேவையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்படும் ஆலைகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அந்த ஆலைகளில் நெல் அரைக்கும் பணிகளை மகளிர் சுயஉதவிக்குழுக்களிடம் ஒப்படைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், எதிர்காலத்தில் நெல் சேமிப்பில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் நவீன சைலோ சேமிப்பு மையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அதிக அளவில் நெல் உற்பத்தியாகும் நல்கொண்டா, சூரியபேட்டை, நிஜாமாபாத், பெத்தபல்லி மற்றும் காமாரெட்டி ஆகிய மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக இந்த மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதற்காக தொகுதிக்கு 50 முதல் 100 ஏக்கர் வரை நிலம் ஒதுக்கப்பட்டு, சைலோ சேமிப்பு மையங்களின் பராமரிப்பு பொறுப்பு மகளிர் சுயஉதவிக்குழுக்களிடம் வழங்கப்பட உள்ளது.

இதுதவிர, உடனடி தேவைகளுக்காக தனியார் சேமிப்புக் கிடங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத பழைய திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து நெல் இருப்பை பாதுகாப்பாக சேமிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான நெல் இருப்பு முறையாக பாதுகாக்கப்படுவதுடன், முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்பாக சேமிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA