Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
சிவகங்கை ஆட்சியர் அலுவலக மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஆட்சியர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின.
அப்போது விழா கூட்டத்திற்குள் திடீரென நுழைந்த காளையார்கோவில் தாலுகா பொன்னாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர், தனது வீட்டிற்குச் செல்லும் பாதையை அதே கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் மறித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக ஆட்சியரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விழா மேடையிலேயே தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோதும், அவர் போராட்டத்தை கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி, காவல் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
சுதந்திர தின விழா நடைபெற்ற இடத்திலேயே ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam