Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை, துடியலூர் பகுதியை சேர்ந்தவர் காலப்பெருமாள் ஆல்பர்ட் (வயது 41). இவர் கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமைந்து உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் விளாங்குறிச்சி பகுதியில் உள்ள லிவிங் ஹோப் என்ற கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்ற போது டார்பின் தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
அப்போது டார்பின் தாஸ், தன்னை கோவை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றி வருவதாக அறிமுகம் செய்து உள்ளார்.
மேலும், விமான நிலையத்தில் ஏலத்தில் விடப்படும் புதிய இன்னோவா காரை அதிகாரிகளின் மூலம் ரூ.15 லட்சத்திற்கு வாங்கித் தருவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட 250 கிராம் சுத்தமான தங்கத்தை ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்திற்கு வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
இதுமட்டுமின்றி, 1 கிலோ தங்கம் தன்னிடம் இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.56 லட்சம் என்றும், அதனை பெரிய நகைக் கடைக்காரர்கள் மற்றும் எம்.பி.க்கள் வாங்குவதாகவும் கூறி ஆல்பர்ட்டை நம்ப வைத்து உள்ளார். அத்துடன், விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவரிடம் இருந்து சான்றிதழ்களை பெற்று உள்ளார்.
இதனை முழுமையாக நம்பிய ஆல்பர்ட், பல தவணைகளாக ரொக்கமாகவும், டார்பின் தாஸ், அவனது மனைவி தனுஷ்யா மற்றும் அவர்களது கூட்டாளிகளான ஷிகந்தர் காசிம், முகமது ரஃபிக், ரம்யா ஞானமூர்த்தி ஆகியோரின் வங்கி கணக்குகளுக்கும் என மொத்தம் ரூ.55 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார்.
ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட பிறகு அவர்கள் காரையோ, தங்கத்தையோ தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். பின்னர் டார்பின் தாஸ் தனது செல்போனை 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டு தலைமறைவாகி விட்டார்.
இதேபோல கோவை கோவில்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீஜா என்பவரிடம் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.94 லட்சத்தைப் பறித்து உள்ளனர்.
கோவையில் மட்டும் சுமார் 15 க்கும் மேற்பட்டோரிடம் டார்பின் தாஸ் மற்றும் அவரது மனைவி தனுஷ்யா உள்ளிட்டோர் மோசடி செய்திருந்தனர். இதை தொடர்ந்து
ஆல்பர்ட் அளித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் டார்பின் தாஸ், அவனது மனைவி தனுஷ்யா மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த மோசடி மன்னன் டார்பின் தாஸை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்ட அவனது மனைவி தனுஷ்யாவை (எ) ரேச்சலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் கைதான டார்பின் தாஸ் பெங்களூரு மற்றும் கன்னியாகுமரியிலும் இதேபோன்று பல கோடி மோசடியில் ஈடுபட்ட பகீர் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டு, பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் டார்பின் தாஸ் (எ) மோகன் தாஸ் (வயது 35) மற்றும் அவனது மனைவி தனுஷ்யா (எ) ரேச்சல் (32) ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.
அங்கு திண்ட்லு மெயின் ரோட்டில் சினேகா கே. பகவத் என்பவர் நடத்தி வந்த 'நெயில்பாக்ஸ் அகாடமி' என்ற அழகுக்கலை பயிற்சி மையத்தில் ரேச்சல் பயிற்சியாளராகச் சேர்ந்து உள்ளார்.
அங்கு உரிமையாளரிடம் சகஜமாகப் பழகிய ரேச்சல், தனது கணவர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியாக இருப்பதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை மலிவாக வாங்கித் தருவதாகவும் கூறி நம்ப வைத்துள்ளார்.
இதனை நம்பிய சினேகா பகவத்திடம் இருந்து மட்டும் பல தவணைகளாக 2 கிலோ தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி மொத்தம் ரூ.68.44 லட்சம் பணத்தை சுருட்டி உள்ளனர். இதுமட்டுமின்றி, அந்த அகாடமி மேலாளர் கீதாவிடம் ரூ.1.30 லட்சம், பயிற்சியாளர் ஹரீஷாவிடம் ரூ.95 ஆயிரம் மற்றும் பிற ஊழியர்களிடம் ரூ.11.20 லட்சம் எனப் பல லட்சங்களை இந்த தம்பதி கறந்து உள்ளனர்.
மேலும், தங்களது குழந்தைகள் படிக்கும் பள்ளியின் ஆசிரியை ஸ்வேதா என்பவரிடம் சுங்கத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.96ஆயிரத்து 750 பெற்று ஏமாற்றி உள்ளனர்.
பணத்தை இழந்த சினேகா பகவத் பெங்களூரு கொடிகேஹள்ளி போலீசில் புகார் அளித்தார்.
இதனை அடுத்து, மங்களூருவுக்குத் தப்பிச் சென்று பதுங்கியிருந்த டார்பின் தாஸ் தம்பதியை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.34.5 லட்சம் ரொக்கம் மற்றும் 107 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த இந்த தம்பதி, பெங்களூரு 7-வது கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவாகினர். இவர்களைப் பிடிக்க நீதிமன்றம் பலமுறை பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது.
பெங்களூரு போலீசிடம் சிக்காமல் தலைமறைவான இந்தத் தம்பதி, கடந்த 2023-ஆம் ஆண்டில் கன்னியாகுமரியிலும் இதே போல தங்களது மோசடி வலையை விரித்து கைவரிசை காட்டி உள்ளனர். அங்கு இவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவையில் கைவரிசை காட்டுவதற்கு முன்பாக, இந்த மோசடி தம்பதி கடந்த 2023-ஆம் ஆண்டில் கன்னியாகுமரியிலும் தங்களது மோசடி வலையை விரித்து உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் உதயமார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரின்ஸ். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
இவரிடம் பழக்கத்தை ஏற்படுத்திய டார்பின் தாஸ், தான் ஏர்போர்ட் அதாரிட்டி ஆஃப் இந்தியாவில் உதவி மேலாளராகப் பணிபுரிவதாகக் கூறி நம்ப வைத்து உள்ளான்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 'செக்யூரிட்டி ஆபிசர்' வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.லட்சத்து 85 ஆயிரம் கேட்டுள்ளான்.
மேலும், கஸ்டம்ஸ் வழியாக 24 கேரட் தங்கம் மலிவாகக் கிடைக்கும் எனக் கூறிய அவன், பிரின்ஸின் மகள் திருமணத்திற்காக 200 கிராம் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6,96,000 கேட்டுள்ளான்.
இதுமட்டுமின்றி, கார் வாங்கித் தர ரூ.4,25,000 மற்றும் ஹோண்டா ஆக்டிவா பைக் வாங்கித் தர ரூ.43,000-ம் கேட்டு உள்ளான்.
இதனை நம்பிய பிரின்ஸ், டார்பின் தாஸின் கூட்டாளிகளான மோகன்தாஸ் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் வங்கி கணக்குகளுக்குப் பல தவணைகளாக மொத்தம் ரூ.5,99,500 பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட டார்பின் தாஸ் மற்றும் அவனது மனைவி தனுஷ்யா ஆகியோர் கூறியபடி எதையும் செய்து தராமல் ஏமாற்றி உள்ளனர்.
தனது மகள் திருமண செலவிற்காகப் பணத்தைத் திருப்பித் தருமாறு பிரின்ஸ் கேட்டபோது, ரவுடிகளை வைத்து கொலை செய்து விடுவதாக அந்த தம்பதி மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் டார்பின் தாஸ், தனுஷ்யா, மோகன்தாஸ் மற்றும் புவனேஸ்வரி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
அதன் பிறகே இவர்கள் கோவையில் முகாமிட்டு பல லட்சங்களை சுருட்டி உள்ளனர்.
பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் கைவரிசை காட்டிய இந்த மோசடி மன்னன் தற்போது கோவையில் சிக்கியுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவனது மனைவி தனுஷ்யாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், தனுஷ்யா இலங்கையில் இருந்து இந்தியாவிற்குள் வந்ததாகவும், போலி ஆவணங்கள் மூலம் தனது பிறந்த இடத்தை மறைத்து அவர் இந்திய குடியுரிமை பெற்றிருக்கலாம் என்றும் புகார்தாரர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
அவரது தாயார் மற்றும் சகோதரி ஓ.சி.ஐ அட்டை வைத்திருப்பதாகவும் கூறப்படுவதால், இது குறித்தும் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.
பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள இவர்களின் பின்னணியில் பெரிய நெட்வொர்க் உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / Durai.J