Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
வெண்டைக்காய் உலகளவில் விரும்பப்படும் ஒரு முக்கியமான காய்கறி பயிராகும். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து பருவங்களிலும் பயிரிடப்படும் முக்கிய வணிகப் பயிர்களில் இதுவும் ஒன்றாகும்.
வெண்டைக்காய் சாகுபடி முறைகள்:
வெண்டை சாகுபடிக்கு மிதமான வெப்பநிலையும், நல்ல வடிகால் வசதியுள்ள மண்வளமும் அவசியமாகும். உவர் மண் தவிர்த்து, நல்ல வடிகால் வசதி கொண்ட கரிசல் மண் மற்றும் செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை.
மண்ணின் pH அளவு 6.0 முதல் 6.8 வரை இருப்பது நல்லது. தமிழ்நாட்டில் பிப்ரவரி - மார்ச் (கோடைப் பருவம்) மற்றும் ஜூலை - ஆகஸ்ட் (மழைப் பருவம்) ஆகிய காலங்கள் விதைப்புக்கு உகந்தவை.
நிலத்தை 3 அல்லது 4 முறை நன்றாக உழுது, ஆட்டு எரு அல்லது தொழு உரம் இட்டு சமன்படுத்த வேண்டும். 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்து, பார்களின் பக்கவாட்டில் 30 செ.மீ இடைவெளியில் விதைகளை 2 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.
ஒரு ஹெக்டேருக்கு சுமார் 7.5 முதல் 8.5 கிலோ விதைகள் தேவைப்படும்.
(hybrid ரகங்களுக்கு 5 கிலோ போதுமானது).
விதைத்த முதல் முறையும், உயிர் தண்ணீர் மூன்றாம் நாளும் பாய்ச்ச வேண்டும். அதன் பின் மண் ஈரப்பதத்திற்கு ஏற்ப 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
விதைத்த 20 மற்றும் 40-வது நாட்களில் கைகளைக் கொண்டு களைகளை நீக்குவது செடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.
விதைத்த 45 நாட்களிலிருந்து காய் காய்க்கத் தொடங்கும். முத்தாத, இளம் பிஞ்சு காய்களை 2 நாட்களுக்கு ஒருமுறை காலை வேளையில் அறுவடை செய்ய வேண்டும்.சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 12 முதல் 15 டன் வரை மகசூல் கிடைக்கும்.
ஒரு ஏக்கருக்குச் சரியாகப் பராமரித்தால் 5,000 கிலோ முதல் 6,000 கிலோ
(5 முதல் 6 டன்) வரை மகசூல் கிடைக்கும்.
வெண்டைக்காயின் விலை சந்தையில் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது. எனினும், ஒரு கிலோவிற்குச் சராசரியாக ₹25 முதல் ₹30 வரை விலை கிடைக்கிறது
வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்:
வெண்டைக்காயில் வைட்டமின் ஏ, சி, கே, பி-காம்ப்ளக்ஸ் மற்றும் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு வரும் என்ற பழமொழி உண்மைதான். இதில் உள்ள வைட்டமின் B6 மற்றும் ஃபோலேட் மூளையின் செல்களை சுறுசுறுப்பாக்கி நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்புத் தன்மை குடலில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகிறது.
இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.
இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்த்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வைட்டமின் 'ஏ' மற்றும் பீட்டா கரோட்டின் அதிகளவில் உள்ளதால், மாலைக்கண் நோய் வராமல் தடுத்து கண் பார்வையை கூர்மையாக்குகிறது.
இதில் உள்ள ஃபோலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்திற்கும், கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானது.
வைட்டமின் 'சி' நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்து சளி, இருமல் போன்ற தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது.
வெண்டைக்காய் குறைந்த முதலீட்டில், குறுகிய காலத்தில் (3 மாதங்கள்) விவசாயிகளுக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய ஒரு சிறந்த பயிராகும்.
அதே வேளையில், நுகர்வோருக்கு மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களை வழங்கும் அரிய காய்கறியாகவும் திகழ்கிறது.
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நமது உணவில் வெண்டைக்காயைச் சேர்த்துக் கொள்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் பயக்கும்
Hindusthan Samachar / vidya.b