போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்
சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்ட அரசுப்பள்ளி +2 மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்
உதயநிதி


சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்ட அரசுப்பள்ளி +2 மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கோவையில் போதைப்பொருள் கும்பலைத் தட்டிக்கேட்ட கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே சென்னையிலும் இதுபோன்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொடரும் கொலைச் சம்பவங்களே சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் அரசு எந்த அளவுக்கு தோல்வியடைந்துள்ளது என்பதற்கு சாட்சியாக இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

போதைப்பொருளைப் பயன்படுத்துவதையோ, விற்பதையோ அம்பலப்படுத்தினால் கொலை செய்யப்படுவார்கள் என்ற அச்சுறுத்தல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படுவதாகவும், நிர்வாகத்திறனற்ற அரசை சமூக விரோதிகள் கண்டு அஞ்சுவதில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை அரசு கண்டும் காணாமல் இருப்பது வெட்கக்கேடானது என தெரிவித்துள்ள அவர், மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்பாடு உள்ளதா, அதற்கான காரணம் என்ன, அதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்கள் மத்தியில் வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் கவுன்சலிங் மற்றும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P