Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தற்போது வரை 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த திட்டம், இனி 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் இந்த விரிவாக்கம் அமலுக்கு வரும் எனவும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் கூடுதலாக சுமார் 15 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என இத்திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மற்றொரு முக்கிய அறிவிப்பாக, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கவுரவிக்கும் வகையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்திற்காக ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b