Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
தெலங்கானாவில் 22ஏ தடைப்பட்ட நிலங்களின் பட்டியல் என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெறுவதாக மத்திய இணை மந்திரி பண்டி சஞ்சய் குற்றம்சாட்டினார்.
ஐதராபாத்தில் உள்ள பா.ஜ.க. மாநில அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
தெலங்கானாவில் மொத்தம் 2.77 கோடி ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் 95 லட்சம் ஏக்கர் நிலங்களை 22ஏ தடைப்பட்ட நிலங்களின் பட்டியலில் எப்படி சேர்க்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
பொதுமக்கள் தங்களது உழைப்பில் வாங்கிய நிலங்கள், தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் மட்டுமின்றி, அரசாங்கமே ஏலம் மூலம் விற்பனை செய்த நிலங்கள்கூட 22ஏ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இதனால் நில உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருவதாகவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் மீது விமர்சனம்
காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். ஆட்சிகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்று பண்டி சஞ்சய் விமர்சித்தார். 22ஏ நில விவகாரத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கல்வி நிறுவனங்களுக்கான கட்டணத் திருப்பிச் செலுத்தும் திட்டத்தில் ஏற்கனவே வழங்க வேண்டிய பழைய நிலுவைத்தொகைகள் இன்னும் வழங்கப்படவில்லை.
ஆனால், அடுத்த கல்வியாண்டு முதல் முன்கூட்டியே பணம் வழங்கப்படும் என்று அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு பதவி வழங்க வேண்டும்
‘ஜென்-இசட்’ இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்று காங்கிரஸ் கூறுவது உண்மையானால், உடனடியாக இளைஞர்களுக்கு மந்திரி பதவிகளையும், சட்ட மேலவை உறுப்பினர் பதவிகளையும் வழங்க வேண்டும் என்று பண்டி சஞ்சய் சவால் விடுத்தார்.
22ஏ தடைப்பட்ட நிலங்களின் பட்டியல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசு வெளிப்படையான முறையில் விளக்கம் அளிப்பதுடன், பொதுமக்களின் நில உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA