Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 80வது சுதந்திர தினவிழா, தருவை விளையாட்டு மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் முன்னிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். பின்னர் மூவர்ண பலூன்கள் மற்றும் சமாதானப் புறாக்களை பறக்கவிட்டனர்.
தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், தாட்கோ, மாவட்ட தொழில் மையம், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 166 பயனாளிகளுக்கு ரூ. 10 கோடியே 92 லட்சத்து 54ஆயிரத்து 551 மதிப்பிலான நலத்திட்ட ஆட்சியர் உதவிகளை வழங்கினார்.
மேலும், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட தொழில் மையம், சமூக நலத்துறை, முதன்மை கல்வி அலுவலர், மகளிர் திட்டம், நில அளவை பதிவேடு துறை, கூட்டுறவுத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சிறப்பாக பணிபுரிந்த 445 அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களை மாவட்ட ஆட்சியர் கௌரவித்தார். சிறப்பாக பணியாற்றிய டவுன் டிஎஸ்பி சுனில், விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் வனசுந்தர், குமாரவேல் பாண்டியன், ஆதாம் அலி, சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வி, தனிப்பிரிவு காவலர் ராஜேஷ்குமார் உள்பட 58 காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, சார் ஆட்சியர், தாசில்தார் ஸ்டார்வின், ஏடிஎஸ்பிகள் திபு, தாமஸ் உள்பட அரசுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். விழாவில், மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
Hindusthan Samachar / vidya.b