Enter your Email Address to subscribe to our newsletters

தேராதூன், 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் தேராதூனில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சுமார் 97 சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் மழை தொடரும் என முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கர்வால் பிராந்தியத்தின் மலைப்பகுதி மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்குவது, நிலச்சரிவு மற்றும் சாலை இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்மட்டம் திடீரென உயரக்கூடும் என்பதால் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வானிலை முன்னறிவிப்புகளை கவனித்து பயணங்களை திட்டமிடுமாறும், நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்குமாறும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே மூடப்பட்டுள்ள 97 சாலைகளில் இருந்து மண் மற்றும் பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் பல்வேறு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேராதூன் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்டில் கடந்த ஆகஸ்ட் 14 முதல் 17-ம் தேதி வரை பருவமழை மீண்டும் தீவிரமடையும் என்றும், ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாகவே தற்போது மழை தீவிரமடைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் முசோரி - தேராதூன் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் தம்சா ஆற்றில் நீர்மட்டம் மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் கோயிலுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் நிர்வாகமும், தொடர்புடைய முகமைகளும் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.
தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், வெள்ளம் தேங்கும் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b