Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட அஜெண்டா அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன.
இதில் உள்ளாட்சி தேர்தலில் பி.சி.க்களுக்கு 34 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான பி.சி.க்களுக்கு 34 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பி.சி.க்களுக்கு 34.50 சதவீதமும், பிற உள்ளாட்சி அமைப்புகளில் 33.50 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.சி. இடஒதுக்கீடு தொடர்பாக அரசு அமைத்த சிறப்பு ஆணையத்தின் அறிக்கையை அமைச்சரவை விரிவாக ஆய்வு செய்தது.
ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 34 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக கருதப்பட்ட நிலையில், மாற்று வழிகள் குறித்தும் அமைச்சர்கள் ஆலோசித்தனர். இறுதியாக, பி.சி.க்களுக்கு 34 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசின் இலக்கை நிறைவேற்றும் வகையில் முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, நகராட்சி மற்றும் மாநகராட்சி தலைவர்களை பொதுமக்களே நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கான தேர்தல் முறையில் முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளது.
நகராட்சி மற்றும் மாநகராட்சி தலைவர்களுக்கு நேரடி தேர்தல் நடத்தும் முடிவு ஏற்கனவே கொள்கை அளவில் எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த இரண்டு முக்கிய முடிவுகள் தவிர, மாநிலத்தின் நிர்வாகம் மற்றும் வளர்ச்சி தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA