Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சட்ட மேலவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்து பேசினார்.
அப்போது, முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான தரவுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், போலி தரவுகள் மூலம் மாணவர் எண்ணிக்கை அதிகமாக காட்டப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வந்ததாக கூறிய லோகேஷ், 2022–23-ம் கல்வியாண்டில் 7.6 சதவீதமும், 2023–24-ல் 3.03 சதவீதமும், 2024–25-ல் 3.24 சதவீதமும் சேர்க்கை குறைந்ததாக தெரிவித்தார்.
தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளிகளின் மாணவர் தரவுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, போலி பதிவுகள் நீக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்த தரவு சீரமைப்பு காரணமாக 2025–26-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை 1.69 சதவீதம் குறைந்ததாக பதிவானது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
0.94 சதவீதம் அதிகரிப்பு
இந்நிலையில், 2026–27-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 0.94 சதவீதம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் லோகேஷ் தெரிவித்தார்.
தரவுகள் சீரமைக்கப்பட்ட பிறகு உண்மையான மாணவர் சேர்க்கை நிலவரம் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், கடந்த 2 ஆண்டுகளில் ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு அரசு பள்ளியோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளியோ மூடப்படவில்லை என்றும் லோகேஷ் சட்ட மேலவையில் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA