நாக்பூரில் 12 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை , 18 ஆகஸ்ட் (ஹி.ச.) மராட்டிய மாநிலம் நாக்பூரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாக்பூரில் உள்ள 12 பள்ளிகளுக்கு நேற்று காலை மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். பள்ளி
A


மும்பை , 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

மராட்டிய மாநிலம் நாக்பூரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாக்பூரில் உள்ள 12 பள்ளிகளுக்கு நேற்று காலை மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

பள்ளி நிர்வாகத்தினரின் இ-மெயில் முகவரிகளுக்கு வந்த அந்த மிரட்டல் செய்தியில், பள்ளிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை வருகிற 31-ந் தேதி வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட 12 பள்ளிகளுக்கும் விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர்.

பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இதற்கிடையே, ஒரே நேரத்தில் 12 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? எதற்காக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மிரட்டல் விடுக்க பயன்படுத்தப்பட்ட இ-மெயில் முகவரி மற்றும் அதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA