மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்கள் நியமனம் - மார்க்சிஸ்ட் சண்முகம் கண்டனம்
சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச) மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில ச
Shanmugam


Jh


சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச)

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மக்களின் அன்றாடப் பயணத் தேவைகளை நிறைவேற்றும் அடிப்படை சேவை நிறுவனங்கள் என்றும், தமிழ்நாட்டில் தினமும் சுமார் 2 கோடி பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குவது போக்குவரத்துக் கழகங்களின் முக்கிய கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் காலிப் பணியிடங்களுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சிஐடியு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும், ஒப்பந்தப் பணியாளர் முறை இடஒதுக்கீட்டை மறுப்பதுடன் சமூக நீதிக்கும் பாதுகாப்பான பயணத்திற்கும் எதிரானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தற்போது தவெக அரசு, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த “எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ்” நிறுவனத்தின் மூலம் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முடிவு செய்திருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு வாய்ப்பை மறுத்து வெளிமாநில நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதுடன், இடஒதுக்கீட்டு அடிப்படையிலான பணி நியமனமும் சமூக நீதியும் பாதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க உத்தரப் பிரதேச நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், “சிந்தூரி மேனேஜ்மெண்ட் சொல்யூசன்ஸ்” நிறுவனத்தின் மூலம் 250 நிர்வாகப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வழங்கப்பட்டுள்ள ஆணையையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

போக்குவரத்துத் துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரந்தர அடிப்படையில் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ