தெலங்கானா அமைச்சர் பொங்குலேட்டி ராஜினாமா செய்ய வேண்டும் - பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் ஹரீஷ் ராவ்
ஐதராபாத் , 18 ஆகஸ்ட் (ஹி.ச.) தெலங்கானாவில் ஒரே இரவில் பல காலனிகள் 22ஏ தடை செய்யப்பட்ட நிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர்
A


ஐதராபாத் , 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

தெலங்கானாவில் ஒரே இரவில் பல காலனிகள் 22ஏ தடை செய்யப்பட்ட நிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஹரீஷ் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

22ஏ தடை நிலங்கள் தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்டுள்ள தவறுக்கு தார்மீக பொறுப்பேற்று,

தெலங்கானா வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலெட்டி சீனிவாஸ் ரெட்டி உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக ஹரீஷ் ராவ் தனது அறிக்கையில் கூறியதாவது:-

பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய காங்கிரஸ் அரசு, புதுப்புது பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது.

முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியின் நிர்வாகம் குழப்பமான நிலையில் உள்ளது. ஒரே இரவில் பல காலனிகள் 22ஏ தடை பட்டியலில் சேர்க்கப்பட்டதால் சாதாரண மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, 22ஏ தடை நிலங்களின் பட்டியலை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

நிலங்களை தடை பட்டியலில் சேர்த்தது அரசுதான் என்பதால், பொதுமக்களிடம் மீண்டும் விண்ணப்பங்களைப் பெறாமல், சம்பந்தப்பட்ட நிலங்களை உடனடியாக அந்த பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் பெரிய தவறு செய்துவிட்டு தற்போது மன்னிப்பு கேட்பதால் மட்டும் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. இந்த நிலங்களை 22ஏ பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டது யார் என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும்.

அரசு செய்த தவறுகளை அதிகாரிகள் மீது சுமத்தி தப்பிக்க முயற்சிப்பது சரியல்ல. பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலவச தொலைபேசி எண்ணும் முறையாக செயல்படவில்லை.

2008-ம் ஆண்டிலேயே அப்போதைய காங்கிரஸ் அரசு நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தை (யு.எல்.சி.) ரத்து செய்தது. இதனால் சம்பந்தப்பட்ட நிலங்கள் பட்டா நிலங்களாக மாறின.

அதேபோல் அரசாணைகள் மூலம் விலக்கு அளிக்கப்பட்ட எச்.எம்.டி.ஏ. மற்றும் ஹுடா நிலங்களையும் தற்போது 22ஏ பட்டியலில் சேர்த்து ரங்காரெட்டி, மேட்சல் மாவட்ட மக்களை அரசு சிரமப்படுத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள தவறுக்கு பொறுப்பேற்று அமைச்சர் பொங்குலெட்டி சீனிவாஸ் ரெட்டி பதவி விலக வேண்டும். அவரை பதவியில் இருந்து நீக்காவிட்டால், முதல்-மந்திரியும் அமைச்சர்களும் இணைந்து இந்த நில விவகாரத்தில் முறைகேடு செய்திருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்களிடம் மேலும் வலுப்பெறும்.

காங்கிரஸ் ஆட்சியில் கல்யாணலட்சுமி திட்டத்தின் நிலையும் மோசமாகியுள்ளது. திருமண நேரத்தில் கிடைக்க வேண்டிய உதவித்தொகை தாமதமாகி, குழந்தை பிறந்த பிறகுதான் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கல்யாணலட்சுமி திட்டம், ‘சந்தானலட்சுமி’ திட்டமாக மாறிவிட்டது.

வருங்காலத்தில் பி.ஆர்.எஸ். ஆட்சி அமைக்கும்.

அப்போது தவறு செய்த காங்கிரஸ் தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

22ஏ நில விவகாரம் தொடர்பாக கே.சந்திரசேகர் ராவ் தலைமையில் சட்டசபையில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு ஹரீஷ் ராவ் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA